வானூரில் 2 குழந்தைகளை தவிக்கவிட்டு தாய் தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் வானூர் மெயின் ரோட்டில் வசித்து வருபவர் சிவக்குமார்.. தனியார் நிறுவன ஊழியரான இவருக்கு மோகன பிரியா (28) என்ற மனைவி இருக்கிறார்.. இவர்கள் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பாக காதலித்து கல்யாணம் செய்துகொண்டனர்.. இந்த தம்பதியருக்கு 3 வயதில் ஒரு மகன் மற்றும் 6 மாதத்தில் ஒரு ஆண் குழந்தையும் இருக்கிறது.. கல்யாணத்துக்கு பின் மோகனபிரியா கணவரின் வீட்டில் மாமனார், மாமியாருடன் ஒன்றாக சேர்ந்து வசித்து வந்தார்.
இந்நிலையில் தனிக்குடித்தனம் செல்வதற்கு மோகன பிரியா விரும்பியதாக தெரிகிறது.. தனது விருப்பத்தை தன் கணவரிடம் கடந்த சில மாதங்களாகவே சொல்லி வலியுறுத்தி வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த சூழலில் நேற்று முன்தினமும் அவர் தனிக்குடித்தனம் செல்வதாக கணவரிடம் தெரிவித்துள்ளார். அதற்கு சிவகுமார் தற்போது கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால், சில மாதங்கள் போகட்டும்.. அதன்பின் தனிக்குடித்தனம் செல்வோம் என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் தான் நேற்று காலை படுக்கையறையில் இருந்த மோகனபிரியா திடீரென்று தனது உடலின் மேல் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.. கண் இமைக்கும் நேரத்தில் அவரது உடல் முழுக்க தீ சரசரவென பற்றி எரிந்தது. இதனால் வலி தாங்க முடியாமல் அலறி துடித்தார் மோகன பிரியா. இந்த அலறல் சத்தம்கேட்டு, பக்கத்து அறையில் இருந்த சிவக்குமார் பதட்டத்துடன் வேகமாக ஓடி வந்து, மனைவியின் உடலில் பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தார். ஆனால் அவர் உடல் பரிதாபமாக கருகி உயிரிழந்தார்.. மனைவியை காப்பாற்றும் முயன்றபோது சிவக்குமாருக்கும் லேசான தீக்காயம் ஏற்பட்டது.
இந்த சம்பவம் பற்றி தகவலறிந்த கோட்டக்குப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு அஜய்தங்கம், சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.. பின்னர் மோகன பிரியாவின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக கனகசெட்டிக்குளத்திலுள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கணவன் மற்றும் மனைவி பிரச்சினையில் 2 குழந்தைகளை தவிக்க விட்டு தாய் தற்கொலை செய்த சம்பவம் வானூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.