தேனி அரசு மருத்துவமனை கல்லூரி மாணவிகள் விடுதியில் நர்சிங் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியை அடுத்த வடிவேல் நகரை சேர்ந்தவர் திவ்யா. இவர் தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு நர்சிங் படிப்பு படித்து வருகிறார். மேலும் அதே பகுதியில் பகுதி நேரமாக நர்சிங் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று பணி முடித்து விட்டு விடுதிக்கு திரும்பிய திவ்யா அனைவரும் தூங்கியபின் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பின் அவரது உடல் தூக்கில் தொங்கியபடி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த சக மாணவிகள் விடுதி காப்பாளரிடம் தகவல் தெரிவித்தனர். பின் அவர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்க, சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில்,
அவர் தற்கொலை செய்துகொண்டு தான் இருந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. மேற்கொண்ட அடுத்தக்கட்ட விசாரணையில், அவரது பெரியப்பா மூன்று நாட்களுக்கு முன் இறந்து விட்டதாகவும், அவரது இறுதிச் சடங்கிற்கு மாணவி விடுப்பு கேட்டு அது கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. ஆனால் இதுதான் உண்மையான காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா ?என்பது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.