தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2,167 ஆக அதிகரித்துள்ளது
கடந்த 4 மாதங்களாக தமிழகம் கொரோனா தொற்றால் அவதிப் பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். நேற்றைய நிலவரப்படி தமிழகம் முழுவதும் 1.47 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 2,099 பேர் உயிரிழந்திருந்தனர்.
அதிகபட்ச உயிரிழப்பாக தலைநகர் சென்னையில் 1,295பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 169 பேரும், திருவள்ளூர் மாவட்டத்தில் 133 பேரும், மதுரை மாவட்டத்தில் 124 பேரும் உயிரிழந்தனர். இந்த நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த தகவலை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதில், தமிழகத்தில் இன்று மட்டும் 4,496 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,51,820 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களில் 5,000 பேர் இன்று மட்டும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,02,310 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 68 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,167 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு 47,340 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.