Categories
தேசிய செய்திகள்

மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ 4 லட்சம் நிவாரணம் – முதல்வர் நிதீஷ் குமார்!

பீகாரின் 6 மாவட்டங்களில் மின்னல் தாக்கி, இறந்த நபர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 4 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என முதல்வர் நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில் “மாநிலத்தின் 6 மாவட்டங்களில் 12 பேர் மின்னல் தாக்கி இறந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்குத் தலா ரூ 4 லட்சம் நிவாரண நிதியாக வழங்கப்படும். மோசமான காலநிலையில் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலாண்மைத் துறையால் அடிக்கடி வெளியிடப்படும் பரிந்துரைகளைப் பின்பற்றவும், மோசமான வானிலை நிலவி வருவதால் வீட்டுக்குள் பாதுகாப்பாக இருங்கள் ‘ என்று ட்வீட் செய்துள்ளார்.

மேலும், மாவட்டங்களிலிருந்து கிடைத்த தகவல்களின்படி, மின்னல் தாக்கி 12 பேர் இறந்தனர். இவர்களில், பெகுசாரையில் 7 பேர், பாகல்பூர், பாங்கா, முங்கர், கைமூர், ஜமுய் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் பலியாகியுள்ளனர்.

அம்மாநிலத்தில் பாட்னா, போஜ்பூர், வைசாலி, நாலந்தா உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. முன்னதாக, ஜூலை 2ஆம் தேதி, பீகார் மாநிலத்தின் 3 மாவட்டங்களில் தனித்தனி மின்னல் தாக்குதலில் 6 பேர் பலியாகினர். ஜூலை 3ஆம் தேதி, பீகார் முழுவதும் மின்னல் தாக்கி 13 பேர் பலியாகினர். ஜூலை 4ஆம் தேதி, பீகாரில் பல்வேறு மாவட்டங்களில் மின்னல் தாக்குதலில் 23 பேர் பலியாகியுள்ளனர். மேலும் இடியுடன் கூடிய மழை பெய்ததால் பலர் காயமடைந்தனர்.

Categories

Tech |