Categories
மாநில செய்திகள்

தமிழ் மக்களின் கரங்கள் நீளும் போது அதை தடுக்க நினைப்பது சர்வாதிகாரம் – அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!

ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னிச்சையாக நிவாரணம் வழங்க கூடாது என்ற அரசின் உத்தரவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த ஏப்., 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் உணவின்றி வாடுபவர்களுக்கு தன்னார்வலர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் நிவாரண நிதியாகவும், உணவுப்பொருட்களையும் வழங்கி வருகின்றனர். இதனால் பல்வேறு இடங்களில் சமூக இடைவெளி பின்பற்றப்படவில்லை என புகார்கள் வந்தன.

இதனை அடுத்து தமிழக அரசு தன்னார்வலர்கள், அரசியல் பிரமுகர்கள் யாரும் தனிப்பட்ட முறையில் நிவாரண பொருட்களை வழங்க தடைவிதித்துள்ளது. நிவாரண பொருட்கள் வழங்க விருப்பமானவர்கள் நிதியுதவியை அரசின் நிவாரண உதவி வங்கி கணக்கிற்கோ , பொருளாககொடுக்க நினைப்பவர்கள் மாநகராட்சி ஆணையர்களிடமோ அல்லது அந்தந்த மாவட்ட நிர்வாகத்திடமோ கொடுக்கலாம் என்று அறிவித்தது.

சமூக இடைவெளி பின்பற்றாமல் பல்வேறு அமைப்பினர் உணவுப்பொருட்கள் தனியாக விநியோகிப்பதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் இருக்கிறது” என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் இதனை மீறுபவர்கள் ஊரடங்கை மீறியதற்காக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.

தமிழக அரசின் இந்த உத்தரவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஸ்டாலின், ஊரடங்கு உத்தரவு காலத்தில் துயருறும் எளியவர்களின் பசி நீக்க, தமிழ் மக்களின் கரங்கள் நீளும்போது, அதைத் தடுக்க உத்தரவிட எவராலும் இயலாது. தானும் செய்யாது அடுத்தவர்களையும் தடுப்பது வஞ்சகம்! இது ஜனநாயக நாடு; உதவி செய்யக் கூடாது என்பது சர்வாதிகாரத்தனம்! ‘கருணையில்லா ஆட்சி கடிந்தொழிக!’ என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூட்டம் சேருவதை ஒழுங்குபடுத்தலாம், உதவியே செய்ய கூடாது என எப்படி கூற முடியும்? என கேள்வி எழுப்பிய அவர், மக்களின் கண்ணீர் துடைக்க தமிழ் மக்களின் கரங்கள் நீளும் போது, அதை தடுக்க அவராலும் இயலாது, தடுக்க நினைப்பது சர்வாதிகாரம் என ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |