மகாராஷ்டிரா மாலேகான் பகுதி ஏற்பட்ட குண்டுவெடிப்பில் குற்றமச்சாட்டப்பட்டவாரன சர்ச்சை எம்.பி பிரக்யா சிங் தாக்கூர் தற்போது மீண்டும் சர்ச்சையைக் கிளப்பி பதவியைப் பறிகொடுத்துள்ளார்.
2019ஆம் ஆண்டு மத்திய பிரதேச மாநிலம் போபால் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வென்ற பிரக்யா சிங் தாக்கூர், அண்மையில் நாடாளுமன்ற பாதுகாப்புத் துறை நிலைக்குழு உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.
மகாத்மா காந்தியைக் கொன்ற கோட்சேவை தேசபக்தன் எனத் தேர்தலின் போது பிரக்யா சிங் தாக்கூர் சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்தார். இப்படிப்பட்ட ஒருவருக்கு நாடாளுமன்ற பதவியைத் தருவது மோசமான செயல் என எதிர்க்கட்சிகள் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று கோட்சே ஒரு தேசபக்தன் என மக்களவையில் மீண்டும் ஒரு முறை சர்ச்சைக் கருத்தை அவிழ்த்துவிட்டுள்ளார் பிரக்யா. இந்த விவகாரம் பெரும் பரபரப்பைக் கிளப்ப, எதிர்க்கட்சிகள் மத்திய பாஜக அரசைக் கடுமையாகச் சாடி வருகின்றன.
இதைத் தொடர்ந்து நாடாளுமன்ற பாதுகாப்புத் துறை நிலைக்குழு உறுப்பினர் பதவியிலிருந்து பிரக்யா சிங் தாக்கூர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். மேலும், நடப்பு கூட்டத்தொடரின் பாஜக நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்கவும் அக்கட்சி தடைவிதித்து நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த அறிவிப்பை பாஜக செயல்தலைவர் ஜே.பி. நட்டா வெளியிட்டுள்ளார். ஒருவாரத்திலேயே பிரக்யாவின் பறிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.