குடியாத்தம் நகராட்சி பகுதிகளில் அறிவிக்கப்பட்டிருந்த 8 நாள் முழு ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று வேலூர் மாவட்டத்தில் மிகவும் வேகமாக பரவி வந்த நிலையில், கடந்த சில நாட்களாக குடியாத்தம் நகரிலும் மிக தீவிரமாக பரவி வருகிறது.. இதுவரை குடியாத்தம் நகரில் மட்டும் 500க்கும் மேற்பட்டோர் இந்த கொடிய கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஏற்கனவே குடியாத்தம் நகராட்சியில் நேரக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு காலை 6 மணி முதல் மதியம் 2 மணிவரை மட்டுமே அத்தியாவசிய கடைகள் செயல்பட்டு வந்தன.
இதையடுத்து கொரோனா தொற்று பரவலை தடுக்க இன்று ( ஜூலை 24) முதல் ஜூலை 31 வரை மொத்தம் 8 நாட்கள் குடியாத்தம் நகராட்சியில் மட்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது குடியாத்தம் நகர பகுதியில் கொரோனா நோய் தொற்று பரவல் குறைந்து இருப்பதாகவும், இதனால் முன்னர் அறிவிக்கப்பட்ட பொது முடக்கம் ரத்து செய்யப்பட்டு வழக்கம் போல் அனைத்து வகையான கடைகளும் காலை 6 மணி முதல் மதியம் 2 மணிவரை மட்டுமே செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் திடீரென்று அறிவித்துள்ளார்.