குறைதீர் கூட்டம்
உள்ளாட்சித் தேர்தலைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடந்த 4ஆம் தேதி மாலை விலக்கிக்கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து அரசின் வழக்கமான செயல்பாடுகள் தொடர்ந்து நடைபெறும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு மனுக்கள் அளிப்பதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பொதுமக்கள் வந்திருந்தனர்.
தரமற்ற ரேஷன் அரிசி
இதில், ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த சைமன் என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பாலித்தீன் பையில் பாக்கெட் செய்யப்பட்ட ரேசன் அரிசியோடு வந்திருந்தார்.
தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்துக் கூறுகையில், “ரேஷனில் வழங்கப்படும் அரிசி தரமற்றதாக உள்ளது. இந்த அரிசியை வாங்கி சமைத்து சாப்பிட்டால் சோறு துர்நாற்றம் வீசுகிறது.
தரமற்ற அரிசிக்கு ரூ.25
இதனால், இந்த அரிசியை சமைக்கக் கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. புதுச்சேரியில், ரேஷனில் வழங்கப்படும் அரிசி தரமற்றதாக இருந்தால் அரிசிக்கு நிகராக கிலோ ஒன்றுக்கு 25 ரூபாயை அம்மாநில அரசு மக்களுக்கு வழங்கிவருகின்றது.
ரேஷன் அரிசியை நம்பியே குடும்பம்
சாதாரண கூலி வேலைக்குச் சென்று பிழைப்பு நடத்தும் மக்கள் ரேஷன் அரிசியை நம்பியே குடும்பம் நடத்துவதால் தரமற்ற அரிசியை வழங்குவது அவர்களின் அன்றாட பிழைப்பை கெடுத்துவிடுவதாக அமைந்துள்ளது. ஆகவே தமிழ்நாடு அரசு இதைக் கவனம் செலுத்தி சரிசெய்ய வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.