தேசிய மக்கள்தொகை பதிவேடு திட்டத்தை (NPR) கேரளாவில் அமல்படுத்த மாட்டோம் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ள கேரள அரசு, அம்மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி, கேரள அரசு தலைமைச் செயலர் கே.ஆர். ஜோதிலால் மாவட்ட ஆட்சியர்கள் அனைவருக்கும் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், “2021ஆம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது தேசிய மக்கள்தொகை பதிவேடு தொடர்பான எந்தவித நடவடிக்கையையும் மேற்கொள்ளக் கூடாது என்பதில் மாநில அரசு உறுதியுடன் உள்ளது. எனவே இதை உறுதிபடுத்தும்வகையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் செயல்பட வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு கடைப்பிடிக்கப்படுகிறதா என மாவட்ட ஆட்சியர்கள் அனைவரும் நேரில் ஆய்வுமேற்கொள்ள வேண்டும் எனவும் இந்த உத்தரவை மீறி நடக்கும்பட்சத்தில் அவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் எனவும் கேரள அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றிய நாளிலிருந்து அதைக் கடுமையாக எதிர்த்துவரும் பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு. இந்தச் சட்டத்திற்கு எதிராக எதிர்க்கட்சியான காங்கிரசுடன் இணைந்து தீவிர போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.
இந்தச் சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை கேரள அரசு அணுகியதற்கு அம்மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான் கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தார். இந்நிலையில், தற்போது மத்திய அரசை சீண்டும்விதத்தில் கேரள அரசு புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.