கொரோனா பரிசோதனை செய்யாமல் தொற்று இல்லை என போலி சான்றிதழ் கொடுத்த மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார்
வங்கதேசத்தில் மருத்துவமனை ஒன்றில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என போலி முடிவுகள் கொடுக்கப்பட்டதாக மருத்துவமனையின் உரிமையாளர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. முஹமது என்ற மருத்துவர் தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யாமல் அவர்களுக்கு தொற்று இல்லை என்று கூறி போலியான சான்றிதழ்களை வழங்கியதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சுமார் ஒன்பது நாட்களாக முகமதை தேடிவந்த நிலையில் இந்தியாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற போது கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரது மருத்துவமனையில் சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்றுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அவற்றுள் 6,300 சோதனைகள் செய்யாமலே முடிவுகள் கொடுத்ததாகவும் 1200 சோதனைகள் மட்டுமே உண்மையானவை என்றும் தெரியவந்துள்ளது. வங்கதேசத்தின் தலைநகரான டாக்காவில் வைத்திருக்கும் அவரது மருத்துவமனைகள் அரசுடன் ஒப்பந்தம் கொண்டு இலவச சிகிச்சை அளிக்கும் என்றபோதிலும் தொற்றுக்கான சான்றிதழ் மற்றும் சிகிச்சைகளுக்கு கட்டணம் வசூலிப்பதாக மருத்துவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.