கொரோனா வைரஸ் உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் இதுவரை 8,72,447 பேர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 43,269 பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக, இத்தாலி, ஸ்பெயின், ஈரான், அமெரிக்கா, பிரேசில் உள்ளிட்ட நாடுகள் தான் கொரோனாவின் பிடியில் சிக்கி தவிக்கிறது. அங்கு நாளுக்குநாள் உயிரிழப்பும், பாதிப்பும் அதிகரித்து கொண்டே வருகிறது.
தற்போது ரஷ்யாவில் இந்த வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அந்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்படவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து ரஷ்யா அதிபர் புதின் கடந்த வாரம் தலைநகர் மாஸ்கோவில் இருக்கும் கொம்முனர்கா மருத்துவமனையில் ஆய்வுகளை மேற்கொண்டார்.
அப்போது மருத்துவமனையின் தலைமை மருத்துவர் டெனிஸ் புரோட்சென்கோவைச் (Denis Protsenko) சந்தித்து அவருடன் புதின் கைகுலுக்கினார். இந்நிலையில் தற்போது மருத்துவர் டெனிஸூக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து டெனிஸ் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
இவரை அதிபர் புதின் சந்தித்து ஒரு வாரம் கூட ஆகாததால் ரஷ்யா அரசியிலில் தற்போது பரபரப்பான சூழல் நிலவுகிறது. டெனிஸுக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், புதினுக்கும் விரைவில் வைரஸ் தொற்று குறித்த சோதனை நடைபெறலாம் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.