ஒடிசா மாநிலத்தில் உள்ள ஜகத்சிங்பூர் பகுதியில் டிர்டோல் என்ற இடம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் ஆம்புலன்ஸ் டிரைவர் ஒருவர் சாலையோரம் ஆம்புலன்ஸை நிறுத்திவிட்டு நோயாளிக்கு மது ஊற்றி டம்ளரில் கொடுத்துள்ளார். அதோடு மதுவை ஆம்புலன்ஸ் டிரைவரும் குடித்துள்ளார். இந்த சம்பவத்தின் போது ஆம்புலன்ஸில் ஒரு சிறுவன் மற்றும் பெண்ணும் உடன் இருந்துள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலை தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையாக மாறியுள்ள நிலையில், இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் நடைபெற்ற போது ஆம்புலன்ஸில் இருந்த நோயாளி நகுலே தெகுரி.
இவர் மரத்திலிருந்து கீழே விழுந்ததால் இவருக்கு காலில் காயம் ஏற்பட்டு ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அப்போதுதான் ஆம்புலன்ஸ் டிரைவர் சாலையோரமாக வண்டியை நிறுத்திவிட்டு அவருக்கு மது ஊற்றி கொடுத்துள்ளார். அதன்பிறகு ஆம்புலன்ஸ் டிரைவர் நோயாளி கேட்டதால்தான் தான் மது ஊற்றி கொடுத்ததாக விளக்கம் கொடுத்துள்ளார். மேலும் ஜகத்சிங்பூர் மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி சேத்ரபாசிடாஷ் இந்த சம்பவம் ஒரு தனியார் ஆம்புலன்ஸில் நடைபெற்று இருந்தாலும், இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதோடு ஆம்புலன்ஸ் டிரைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.