Categories
தேசிய செய்திகள்

கொரோனோவால் பொருளாதாரம் கடும் நெருக்கடி; கைதட்டல் மக்களுக்கு உதவாது…. ராகுல் காந்தி ட்வீட்!

கொரோனா வைரஸ் பாதிப்பினால் ஏற்படும் பொருளாதார விளைவுகளை சமாளிக்க நடவடிக்கைகள் தேவை என்று ராகுல் காந்தி பிரதமர் மோடியை வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா வைரஸ் ஏற்கெனவே சரிவில் இருக்கும் நம் பொருளாதாரத்துக்கு பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர்கள், தினக்கூலிகள் கடுமையான பொருளாதார விளைவுகளால் பாதிக்கப்படுவார்கள்.

எனவே வைரஸ் பரவலை தடுக்க பணியாற்றுபவர்களுக்கு கைதட்டி கரகோஷம் செய்வதால் என்ன பயன்? என கேள்வி எழுப்பிய அவர், வெறும் கைதட்டல் அவர்களுக்கு உதவாது என குறிப்பிட்டுள்ளார். அவர்களுக்குத் தேவை ரொக்க நிவாரணம், வரிச்சலுகைகள் மற்றும் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதில் நிவாரணம் அளிப்பதொடு பெரிய பொருளாதார சலுகைகளை அறிவிக்க வேண்டும். உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை எடுங்கள் என்று தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுக்கு இந்தியாவில் இதுவரை 290க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 300ஐ நெருங்கி கொண்டிருக்கிறது. மேலும் இந்த வைரஸுக்கு 4 இந்தியர்கள், ஒரு இத்தாலியர் என மொத்தம் 5 பேர் பலியாகியுள்ளனர்.

இதனால் மத்திய அரசு பல்வேறு முக்கிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக நாளை நாட்டு மக்கள் அனைவரும் சுய ஊரடங்கு முறையை பின்பற்ற வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாளை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ள மோடி, இதனை வெற்றிகரமாக செய்து முடித்தபின்னர் அனைவரும் வெளியே வந்து கைதட்டி கரகோஷம் எழுப்புங்கள் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இதனை குறிப்பிட்ட ராகுல் காந்தி, கரகோஷம் எழுப்புவது மக்களுக்கு உதவாது என கூறியுள்ளார்.

Categories

Tech |