தேர்தல் பிரச்சாரத்தின் போது தேச துரோகிகளை சுட்டுத்தள்ள வேண்டும் என மத்திய இணை அமைச்சர் முழக்கமிட்டது தொடர்பாக தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல்வருகின்ற பிப்ரவரி 8-ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான முடிவுகள் பிப்ரவரி 11-ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளன. இதற்காக அம்மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. ஆளும் கட்சியான ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்தநிலையில் ரிதாலா தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிடும் மணிஷ் சவுத்ரிக்கு ஆதரவு தெரிவித்து, நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராடுபவர்களை கடுமையாக தாக்கிப் பேசிய அவர், தொடர்ந்து தேச துரோகிகளையெல்லாம் சுட்டுத்தள்ள வேண்டும் எனமுழக்கமிட்டார். பிரச்சார கூட்டத்தில் உள்ளவர்களும் அதனை ஆமோதித்து பதில் முழக்கம் எழுப்பினர். இதையடுத்து காங்கிரஸ் சார்பில் நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் மீது புகாரளிக்கப்பட்டது. அதைதொடர்ந்து ரிதாலா தேர்தல் அலுவலர் அறிக்கையளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.