Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

விவசாயியை மிதித்து கொன்ற யானை….. நிவாரணம் கேட்டு மறியல் செய்த கிராம மக்கள்….. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

திண்டுக்கல்லில் விவசாயி ஒருவரை யானை மிதித்து கொன்றதையடுத்து நிவாரணம் கேட்டு கிராமமக்கள் மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி பகுதியை அடுத்த பண்ணைபட்டி மலையடிவார கிராமப் பகுதிகளில் காட்டு யானைகளின் அட்டகாசம் சமீபகாலமாக அதிகரித்து உள்ளது. இது குறித்து ஏற்கனவே பலமுறை கிராமவாசிகள் வனத்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில், காட்டு யானைகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்துவதாகவும், பயிர்களை சேதப்படுத்துவதாகவும் தெரிவித்தனர்.

மேலும் சில நாட்களுக்கு முன்பு கூட காட்டுயானைகள் வாழை மற்றும் தென்னை தோட்டத்திற்குள் புகுந்து மரங்களை சேதப்படுத்தியதாகவும் வருத்தம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நேற்று விவசாயியான முருகன் என்பவர் தோட்டத்திற்கு அருகில் உள்ள தனது வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அப்போது யானை சத்தம் கேட்டு வெளியில் வந்து பார்த்த பொழுது காட்டுயானைகள் தனது தோட்டத்தில் முகாமிட்டு இருப்பதை கண்டு அதிர்ந்து போனார்.

இதையடுத்து அவர் யானைகளை விரட்ட முயற்சித்தபோது ஒரு யானை மட்டும் முருகனை நோக்கி ஓடிவந்து அவரை தூக்கி வீசியதோடு காலால் மிதித்து கொன்றது. இதையடுத்து யானைகள் கூட்டமாக பிளிற,  அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து சத்தம்  எழுப்பி யானைகளை விரட்டினர். இதையடுத்து இறந்தவர் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க கோரியும்,

யானைகள் ஊருக்குள் வராமல் இருக்க மலையடிவாரங்களில் சோலார் மின்வேலி அமைக்க கோரியும்,  ஒட்டன்சத்திரம் நெடுஞ்சாலையில் பிணத்தை வைத்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு  சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து மறியல் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Categories

Tech |