நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் UEFA யூரோ சாம்பியன்ஷிப் கால்பந்து தொடர் அடுத்தாண்டு மார்ச் மாதம் நடைபெறுகிறது. இந்தத் தொடருக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் தற்போது நடைபெற்றுவருகிறது. இதில் ஏ பிரிவில் நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து – மாண்டிநீக்ரோ அணிகள் மோதின. இது இங்கிலாந்து கால்பந்து அணியின் ஆயிரமாவது போட்டியாகும்.
லண்டன் விம்ப்லே மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் தொடக்கத்திலிருந்தே இங்கிலாந்து வீரர்கள் கடுமையான நெருக்கடியை மாண்டிநீக்ரோ அணிக்கு அளித்தனர். ஆட்டத்தின் 11ஆவது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஆக்ஸ்லேட் சாம்பர்லின் கோல் கணக்கை தொடங்கிவைத்தார்.
அதன்பின் ஒவ்வொரு பத்து நிமிடத்திற்கும் ஒரு கோல் அடித்த இங்கிலாந்து வீரர்கள் மாண்டிநீக்ரோ வீரர்களை குழப்பமடையச் செய்தனர். இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி கேன் 18, 24, 37 ஆகிய நிமிடங்களில் ஹாட்ரிக் கோல் அடித்து அமர்களப்படுத்தினர். இதற்கிடையே அந்த அணியின் மார்க்கஸ் ராஷஃபோர்டும் 30ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்திருந்ததால் இங்கிலாந்து அணி முதல் பாதியின் முடிவில் 5-0 என வலுவான முன்னிலைப் பெற்றிருந்தது.
இரண்டாவது பாதி ஆட்டத்திலும் எதிரணியின் கோல் முயற்சிகளை டிபென்சிவ் ஆட்டத்தால் இங்கிலாந்து அணி தடுத்தது. அப்போது மாண்டிநீக்ரோ வீரர் அலெக்சாண்டர் சோப்ராநாக் ஒரு ஆஃப் சைட் கோல் அடிக்க மீண்டும் இங்கிலாந்தின் கோல் எண்ணிக்கை அதிகரித்தது. பின்னர் இறுதியில் இங்கிலாந்தின் டேமி ஆப்ரகாம் ஒரு கோல் அடித்தார். இதனால் இங்கிலாந்து அணி 7-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றதோடு அடுத்தாண்டு நடைபெறும் யூரோ கால்பந்து தொடருக்கு தகுதிபெற்றது.
ஆயிரமாவது போட்டியில் இங்கிலாந்து நிகழ்த்திய சாதனைகள் சில…
இங்கிலாந்து அணி ஆயிரமாவது போட்டியில் 7-0 என மாண்டிநீக்ரோவை வீழ்த்தியதே அந்த அணி உள்ளூரில் பதிவு செய்யும் இரண்டாவது பெரிய வெற்றியாகும். முன்னதாக 1987ஆம் ஆண்டு துருக்கி அணியை 8-0 என வீழ்த்தியது
நேற்யைப் போட்டியில் இங்கிலாந்து அணி 37 நிமிடங்களில் ஐந்து கோல்களை அடித்தது. முன்னதாக 1946ஆம் ஆண்டு நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் முதல் 35 நிமிடங்களில் ஐந்து கோல்களை அடித்தது இங்கிலாந்து.
இங்கிலாந்து அணி நடப்பு ஆண்டில் ஒன்பது போட்டிகளில் விளையாடி 34 கோல்களை அடித்துள்ளது. இதற்கு முன் 1966இல் 38 கோல்களும் 1982இல் 34 கோல்களும் அடித்ததே இங்கிலாந்து அணியின் அதிகபட்சமாக இருந்தது.