Categories
கிரிக்கெட் விளையாட்டு

“ஆட்டத்தின் போக்கை மாற்றியது அந்த பந்து தான்” வில்லியம்சன் வேதனை…!!

கடைசி கட்டத்தில் ஸ்டோக்ஸ் பேட்டில் பட்டு பந்து பவுண்டரி சென்றது தான் ஆட்டத்தின் போக்கை அப்படியே மாற்றி விட்டது என்று வில்லியம்சன் தெரிவித்துள்ளார் 

நேற்று நடந்த உலக கோப்பை இறுதி போட்டியில்  இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் மோதியது.  டாஸ் வென்று  பேட்டிங் தேர்வு செய்து ஆடிய நியூசிலாந்து அணி  8 விக்கெட் இழந்து 241 ரன்கள் எடுத்தது. அந்த அணியில்  அதிகபட்சமாக நிக்கோல்ஸ் 55 ரன்களும், டாம் லேதம் 47 ரன்களும் எடுத்தனர்.

பின்னர் இலக்கை நோக்கி இங்கிலாந்து அணியின்  தொடக்க வீரர்களாக ஜானி பேர்ஸ்டோவும், ஜேசன் ராயும் களமிறங்கினர். ஜேசன் ராய் 17 ரன்னில் ஆட்டமிழந்தார். அதை தொடர்ந்து களமிறங்கிய ஜோ ரூட் 7, ஓரளவு தாக்கு பிடித்த பேர்ஸ்டோ 36  கேப்டன் மோர்கன் 9 ரன்னில் வெளியேற இங்கிலாந்து அணி 23.1 ஓவரில் 86/4 என்று தடுமாறியது.

இதையடுத்து பென் ஸ்டோக்சும், ஜாஸ் பட்லரும் ஜோடி சேர்ந்து பொறுப்பாக ஆடினர். இருவரும் அணியின் சரிவை நிலை நிறுத்தினர். பின் பட்லர் 59 ரன்னில் ஆட்டமிழந்தார். இருப்பினும் ஸ்டோக்ஸ் கடைசி வரை போராடினார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்டது. ட்ரெண்ட் போல்ட் வீசிய அந்த ஓவர் டை ஆனது.  பென் ஸ்டோக்ஸ் 84 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

இதையடுத்து சூப்பர் ஓவரில் பட்லரும், ஸ்டோக்ஸும் களமிறங்கினர். போல்ட் வீசிய அந்த ஓவரில் 15 ரன்கள் எடுத்தனர். பின்னர் 16 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்மி நீஷமும், மார்ட்டின் கப்திலும் களமிறங்கினர். ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய இந்த ஓவரில் நீஷம் 3வது பந்தில்  1 சிக்ஸர் அடித்ததால் ஆட்டத்தில் பரபரப்பு நிலவியது. கடைசி 1 பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்டது.

Seithi Solai

ஒட்டு மொத்த அரங்கமும் கண் இமைக்காமல் பார்த்த அந்த பந்தில் கப்தில் அடித்து விட்டு 2 ரன்கள் ஓட முயன்ற போது ரன் அவுட் ஆனார். இந்த சூப்பர் ஓவரும்  டை -ஆனது.  உலககோப்பை ஐசிசி விதிப்படி சூப்பர் ஓவர் டை ஆனால் அதிக பவுண்டரிகள் அடித்த அடிப்படையில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. 44 ஆண்டு கால கனவையும் நினைவாக்கியது இங்கிலாந்து அணி.

போட்டிக்கு பின், தொடர் நாயகன் விருது பெற்ற நியூசி கேப்டன் கேன் வில்லியம்சன் பேசும் போது, “போட்டி கடுமையான சவாலாக இருந்தது. கோப்பையை வென்ற இங்கிலாந்து அணிக்கு வாழ்த்துக்கள். உலக கோப்பையை வெல்ல அந்த அணி தகுதியானது. நங்கள் எதிர்பார்த்ததை விட இந்த பிட்ச் வித்தியாசமாக இருந்தது. இதில் நாங்கள் 300 ரன்களுக்கு மேல் அடிக்கலாம் என்று பேசிக்கொண்டிருந்தோம். ஆனால் அப்படி எதுவுமே நடக்கவில்லை. கூடுதலாக இன்னும் 10-20 ரன்கள் அடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

மேலும் பேசிய அவர்,” எங்களது வீரர்களும் சிறப்பாக ஆடி, கடைசி வரை போராடினார்கள். அதற்காக அவர்களுக்கு நன்றி. கடைசி கட்டத்தில் ஸ்டெம்பை நோக்கி எறியப்பட்ட பந்து ஸ்டோக்ஸ் பேட்டில் பட்டு பவுண்டரி சென்றது தான் அவமானகரமானது. இது தான் ஆட்டத்தின் போக்கை அப்படியே மாற்றி விட்டது. விளையாட்டில் இது ஒரு அங்கம் என்றாலும் இது போன்ற சம்பவங்கள் இனி நடக்க கூடாது என்று நினைக்கிறன்” என்றார்.

 

 

Categories

Tech |