Categories
அரசியல் மாநில செய்திகள்

“குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்து வதந்தியைப் பரப்புவது தீவிரவாத செயல்” – ராஜேந்திர பாலாஜி..!!

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக பொய்யான வதந்தியை ஏற்படுத்துவது தீவிரவாதத்தை வளர்க்கின்ற செயல் என்று பால் வளத்துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆனைக்குட்டம் பகுதியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ” உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அனைத்துக் காலங்களிலும் அதிமுக அரசு தொடர வேண்டும் என மக்கள் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

கண்டிப்பாக உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுகவின் ஆட்சி தான் தொடரும். தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியின் சூழ்ச்சியினால் மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால், ஒருநாள் உண்மை கண்டிப்பாக வெளிவரும். அப்போது, மக்கள் இந்தச் சட்டம் குறித்து நன்றாகப் புரிந்து கொள்வார்கள். எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தற்போது இனவாதத்தையும், தவறான எண்ணத்தையும் பொது மக்களிடையே பரப்பிக் கொண்டிருக்கிறார்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தில் இந்தியாவில் வாழும் எந்த இஸ்லாமியர்களும் பாதிக்கப்படுவதில்லை என மத்திய அரசு உத்தரவாதம் அளித்ததுள்ள நிலையில் திமுக போராட்டம் நடத்தி வருவது கண்டிக்கத்தக்கது. குறிப்பாக, இந்தச் சட்டத்தை இஸ்லாமிய மதத்தில் ஜமாத்தில் உள்ள பெரிய தலைவர்கள் ஆதரித்து கருத்துகளை வெளியிட்டு வரும் சூழலில் திமுக அதைப் பெரிது படுத்துவது வேடிக்கையானது.

அண்டை நாடுகளான வங்கதேசம், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் பாதிக்கப்பட்டவர்கள் தான், இந்தியாவில் தஞ்சம் அடைந்து குடியுரிமை கேட்டு வருகிறார்கள். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக பொய்யான வதந்தியை ஏற்படுத்துவது தீவிரவாதத்தை வளர்க்கின்ற செயல்’ எனத் தெரிவித்தார்.

Categories

Tech |