Categories
தேசிய செய்திகள்

கொரோனாவில் இருந்து விடுதலை… உற்சாக ஆட்டம் போட்ட குடும்பம்… வைரலாகும் வீடியோ…!!

கொரோனாவில் இருந்து மீண்டதால்  குடும்பத்துடன் மருத்துவமனையில் உற்சாக ஆட்டம் போட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

கொரோனா வைரஸ் மனித குலத்தை கதி கலங்க வைத்து கொண்டு இருக்கிறது. அதே சமயம் சிகிச்சைக்கு பின்னர் வைரஸ் தொற்றில் இருந்து குணம் அடையும் போது, அது அவர்களுக்கு மிகுந்த உற்சாக கொண்டாட்டமாக மாறி விடுகிறது.

அப்படித்தான் ஒரு சம்பவம், மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்று பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அம்மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதித்து ஒரே குடும்பத்தினர் 19 பேர், கட்னி மாவட்ட மருத்துவமனையில் உள்ள தனிமை வார்டில் கடந்த 8-ந் தேதி சேர்க்கப்பட்டார்கள்.
தொடர் சிகிச்சையால் அவர்கள் அனைவருக்கும் சுதந்திர தினத்தன்று  நடத்தப்பட்ட மறுபரிசோதனையில்  தொற்று இல்லை என தெரிய வந்தது.

இதனால் அவர்கள் ஆஸ்பத்திரியில் இருந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இது அவர்களுக்கு மிகுந்த உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் தந்தது. சமீபத்தில் சர்ச்சைக்கு இடமான வகையில் மரணம் அடைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், ஷ்ரத்தா கபூர் மற்றும் பலரது நடிப்பில் வெளிவந்த ‘சிச்சோர்’ என்ற இந்திப்படத்தில் வரும் “சிந்தா கார்கே க்யா பேயேகா, மார்னே சே பெஹ்லே மார் ஜெயேகா” என்ற பாடலை பெண்கள், குழந்தைகள் என அந்த குடும்ப உறுப்பினர்கள் சிலர் மருத்துவமனையில் வைத்தே உற்சாகமாக பாடி துள்ளல் ஆட்டம் போட்டனர். இது அந்த வார்டையே கலகலப்பாக மாற்றி விட்டது.

இதை அங்கிருந்த சிலர் செல்போனில் படம் பிடித்து சமூக ஊடகங்களில் வெளியிட அது வைரலாக பரவியது. இதுகுறித்து அந்த குடும்ப உறுப்பினர் ஒருவர் கூறுகையில், “ கொரோனா என்றதும் ஆரம்பத்தில் நாங்கள் எல்லோரும் பயந்து விட்டோம். ஆனால் மாவட்ட மருத்துவமனையில் முறையான சிகிச்சை பெற்று நாங்கள் அனைவரும் குணம் அடைந்து விட்டோம். இது எங்கள் குடும்பத்துக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்துள்ளது. அதை கொண்டாடத்தான் ஆடினோம். இந்த வீடியோ, சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளது. இதனால் வைரசை எதிர்த்து அனைவரும் துணிச்சலுடன் போராடுவார்கள்” என குறிப்பிட்டு கூறியுள்ளார்.

Categories

Tech |