நிர்பயா குற்றவாளிகளின் குடும்பத்தினர் 4 பேரையும் கருணைக்கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
டெல்லியில் கடந்த 2012 ஆம் ஆண்டு ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சாலையில் தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கில் அக்சய் குமார் சிங், பவன் குமார் குப்தா, வினய் ஷர்மா, முகேஷ் சிங் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
குற்றவாளிகள் நால்வரும் தங்களுக்குரிய சட்ட வாய்ப்புகளைமாறி மாறி பயன்படுத்தியதால் 3 முறை தூக்கு தண்டனை ஒத்தி வைக்கப்பட்டது. இறுதியில் வருகின்ற 20 ஆம் தேதி காலை 5: 30 மணிக்கு அக்சய் குமார் சிங், பவன் குப்தா, வினய் ஷர்மா, முகேஷ் சிங் ஆகிய நால்வரையும் தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் நிர்பயா குற்றவாளிகளின் குடும்பத்தினர் 4 பேரையும் கருணைக்கொலை செய்ய அனுமதிக்கவேண்டும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கடிதம் எழுதியுள்ளனர். அவர்கள் அனுப்பியிருக்கும் அந்த கடிதத்தில், தங்கள் குடும்பத்தில் பெண்கள் குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு கருணைக் கொலை செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் நிர்பயா போன்ற குற்றச்சம்பவங்கள் ஏதும் நடக்காமல் தடுக்க தங்கள் வேண்டுதலை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும் மன்னிக்க முடியாத பாவங்கள் எதுவுமில்லை என்றும் அவர்கள் அக்கடிதத்தில் கூறியுள்ளனர்.