திமுக சொல்லி பெண்கள் கோலம் போட்டால் குடும்பம் அலங்கோலமாகி விடும் என்று பாஜகவின் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து சென்னை பெசன்ட் நகரில் கோலம் போட்ட பெண்களை காவல் துறையினர் கைதுசெய்தனர். இதற்கு பல்வேறு அமைப்புகளும் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. அதை தொடர்ந்து திமுக எம்பி கனிமொழி சென்னை, தூத்துக்குடியிலுள்ள தனது வீடுகளிலும், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வீட்டிலும், ஸ்டாலின் வீட்டிலும் கோலம் போட்டு திமுக தனது எதிர்ப்பை பதிவு செய்தது. மேலும் விசிக தலைவர் திருமாவளவனும் அவராகவே கோலம் போட்டு எதிர்ப்பு தெரிவித்தார். இந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பரவி பெரும்பாலான இடங்களில் மக்கள் வீட்டுவாசல் முன்பு கோலம் போட்டனர்.
இந்தநிலையில் சென்னையில் பேட்டியளித்த பாஜகவின் பொன் ராதாகிருஷ்ணன், கோலம் போட்டால் வீடுகளில் குண்டு வைத்து விடுவார்கள். திமுக சொல்லி பெண்கள் கோலம் போட்டால் குடும்பம் அலங்கோலமாகிவிடும் என்று பேசினார். மேலும் சென்னையில் மாணவர்கள் கல்வீசி போராட்டம் நடத்தினால் காவல்துறையினர் குண்டு வீசுவர் என்றுதான் ஹெச் ராஜா பேசினார் என்றும், போராட்டம் நடத்தும் போது காவல்துறை எப்படி வேடிக்கை பார்க்கும் என்றும் தெரிவித்தார்.