சென்னையில் பிரபல ரவுடி வல்லரசு போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்
சென்னையில் பிரபல ரவுடி வல்லரசும் அவனது கூட்டாளிகளும் எம்.எம் கார்டன் பகுதியில் அரிவாளுடன் அட்டகாசம் செய்வதாக காவல்துறைக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதிக்கு சென்ற வியாசர்பாடி காவல்நிலைய போலீசார் பவுன்ராஜ், ரமேஷ் ஆகியோர் வல்லரசை பிடிக்க முயன்றனர். அப்போது இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் காவலர் பவுன்ராஜை வல்லரசு அரிவாளால் வெட்டினார். உடனே படுகாயமடைந்த காவலரை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இந்நிலையில் மாதவரம் பேருந்து நிலையத்தின் பின்புறம் ரவுடி வல்லரசு ஒழிந்து கொண்டிருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து காவல் ஆய்வாளர்கள் மில்லர், ரவி, பிரேம் குமார், தீபன் ஆகியோர் ரவுடியை பிடிக்க சென்றனர். அப்போது ரவுடி வல்லரசு, உதவி காவல் ஆய்வாளர்கள் பிரேம் குமார், தீபன் ஆகிய இருவரையும் அரிவாளால் வெட்டினார். இதையடுத்து ரவுடி வல்லரசை ஆய்வாளர்கள் துப்பாக்கியால் சுட்டனர். குண்டடி பட்ட வல்லரசை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் எற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதற்கிடையில், ரவுடியின் கூட்டாளியான வியாசர் பாடியை சேர்ந்த கதிரவன், பெரம்பூரை சேர்ந்த கார்த்திக் ஆகிய இருவரையும் கைது செய்தனர். என்கவுண்டரில் கொல்லப்பட்ட ரவுடி வல்லரசு மீது கொலை, கொலை முயற்சி, அடிதடி என 10 வழக்குகள் உள்ளதாகவும் இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.