எப்பக்கத்தில் இருந்தாவது எப்படியாவது இந்தியை திணித்துவிட முடியாதா என மத்திய அரசு முயற்சி செய்கிறது என முக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இந்தி தினம் கொண்டாடப்படுகிறது . இந்தி தினத்தையொட்டி ஒரே நாடு ஒரே மொழி என்ற அடிப்படையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா ட்விட்டரில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், இந்தியா வெவ்வேறு மொழிகளைக் கொண்ட நாடு. ஒவ்வொரு மொழிக்கும் அதன் சொந்த முக்கியத்துவம் உண்டு. ஆனால் முழு நாட்டிற்கும் ஒரு மொழி இருப்பது மிகவும் முக்கியம். இது உலகில் இந்தியாவின் அடையாளமாக மாற வேண்டும். இன்றைய தேதிக்கு இந்தியாவை ஒருங்கிணைக்க வேண்டுமென்றால், அது அதிகம் பேசப்படும் இந்தி மொழியால் மட்டுமே முடியும் என்று பதிவிட்டுள்ளார்.
இந்த கருத்திற்கு பலரும் சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். “எப்பக்கத்தில் இருந்தாவது எப்படியாவது இந்தியை திணித்துவிட முடியாதா என மத்திய அரசு முயற்சி செய்கிறது. மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக அரசு பல முயற்சி செய்து தமிழகத்தில் இந்தியை நுழைக்க பார்க்கிறது என்று கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அன்னை தமிழ் காக்கும் பணிகளை நாடாளுமன்றம் மக்கள் மன்றத்தில் தொடர்ந்து ஆற்றிடுவோம். நாடாளுமன்றம் மக்கள் மன்றத்தில் பெறுகின்ற வெற்றியை அண்ணாவுக்கு காணிக்கையாக்குவோம் என்றும் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.