போட்டியை சமாளித்து சுயசார்பு இந்தியாவை உருவாக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது என நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
பிரதமர் மோடி அறிவித்த சுயசார்பு திட்டத்தின் கீழ் நான்காம் கட்ட அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு வருகிறார். அதில், சுயசார்பு என்பது தனிமைப்படுத்திக் கொள்வதற்கான கொள்கை அல்ல, சுயசார்பு இந்தியா என்பது இந்தியாவிலேயே தயாரிப்போம் என்ற கொள்கையை தீர்க்கமாக கொண்டது என கூறியுள்ளார்.
போட்டியை சமாளித்து சுயசார்பு இந்தியாவை உருவாக்க மத்திய அரசு முயற்சி செய்து வருவதாகவும், பிறநாடுகளுடன் போட்டியிட நாம் தயாராக இருக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்துகிறார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கட்டமைப்பு ரீதியான சீர்திருத்தங்களை மேற்கொள்வது மற்றும் தன்னிறைவான பொருளாதாரத்தை உருவாக்குவதே பிரதமர் வகுத்திருக்கும் திட்டத்தின் அடிப்படை நோக்கமாக உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக வலிமையான சீர்திருத்தங்களை கொண்டு வந்துள்ளார் பிரதமர் மோடி என தெரிவித்த அவர் நிறைய துறைகளில் விதிமுறைகள், பங்களிப்புகள் எளிமையாக இருக்க வேண்டும் என விரும்புகின்றனர். எனவே நாட்டில் தொழில்துறை வளர்ச்சி பெற கொள்கை சீர்திருத்தங்கள் தேவை என கூறியுள்ளார். மேலும் ஜிஎஸ்டி, நேரடி மானியம் ஒரே நாடு ஒரே ரேசன் போன்ற சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், ஜிஎஸ்டி போன்ற வரி சீர்திருத்தங்களால் முதலீடுகளை ஈர்க்கும் நாடாக இந்தியா விளங்கி வருகிறது என்றும் தகவல் அளித்துள்ளார்.