விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.
தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு வருகின்ற அக்டோபர் 21-ல் இடைத்தேர்ல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து திமுகவும் அதிமுகவும் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. விக்கிரவாண்டி தொகுதியில் திமுகவும், நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து திமுக இன்று காலை 10 மணிமுதல் விருப்ப மனுக்களை அளித்து வருகின்றது.
இதில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட விருப்பம் தெரிவித்து முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகனும், திமுக எம்.பியுமான கவுதம சிகாமணி மனு தாக்கல் செய்துள்ளார். இதனால் முக ஸ்டாலின் தனது மகன் உதயநிதியை வேட்பாளராக அறிவிக்கலாம் என்று திமுக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
மேலும் புகழேந்தி, ரவிதுரை, இராஜாராம், தங்கராசன் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளனர். அதை தொடர்ந்து மாலை 6 மணியுடன் விருப்பமனு வழங்கும் அவகாசம் நிறைவடைந்தது. விருப்பமனு அளித்தவர்களிடம் நாளை காலை 10 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் முக ஸ்டாலின் நேர்காணல் நடத்த உள்ளார்.