நடிகர் கார்த்தி தான் நடிக்கும் படத்தில் வாயைத் திறந்தால் போதும் அது பிளாக்பஸ்டர் என்ற புதுவித டிரெண்டை அறிமுகப்படுத்தியுள்ளனர் மீம் கிரியேட்டர்கள்.தீபாவளி ஸ்பெஷலாக கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் கைதி. கார்த்தி நடித்திருக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடி கிடையாது, பாட்டு கிடையாது. ஆனால் இவற்றை போக்கும் விதமாக அதிரடி ஆக்ஷன், செண்டிமென்ட் என தனது அற்புதமான நடிப்பால் ஸ்கோர் செய்து நடிகர் கார்த்தி கைதட்டல் வாங்கியுள்ளார்.
இது ஒரு புறம் இருக்க படத்தின் விறுவிறுப்பான திரைக்கதை, பின்னணி இசை, ஒளிப்பதிவு உள்ளிட்ட இதர டெக்கனிக்கல் விஷயங்கள் சிறு வேடங்களில் தோன்றிய நடிகர்கள் என அனைவரும் தங்களது பங்களிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருப்பதாக பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.
தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் வெளியான கைதி, இரண்டிலும் ஹிட்டாகியுள்ளது. இதையடுத்து கைதியின் ஹிட் குறித்து பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டாலும், படத்தின் வெற்றிக்கும் வேறொரு புதுமையான காரணத்தை யோசித்து அதனை வெளிப்படுத்தியுள்ளனர் மீம் கிரியேட்டர்கள். இம்முறை மீம் கிரியேட்டர்கள் பேர்ட்டோஷுட் என்னும் விஷயத்தை தங்களின் மீம்களின் மையக்கருத்தாக எடுத்துள்ளனர்.
பொதுவாக படத்தின் கதைக்களத்துக்கு ஏற்றவாறு போட்டோஷுட் செய்யப்பட்டு படத்தின் போஸ்டர்கள் வெளியிடப்படுவது வழக்கம். அந்த வகையில் கார்த்தியின் சூப்பர்ஹிட் படங்களான பருத்திவீரன், சிறுத்தை, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களில் கதைகளுக்கு ஏற்றவாறு நடிகர் கார்த்தி தனது வாயைத்திறந்து கோபத்தின் உக்கிரத்தில் இருப்பது போன்ற போஸ்டர்கள் வெளியிடப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்டது.
இதேபோன்று தற்போது வெளியாகியிருக்கும் கைதி படத்துக்கும் கண்களில் கோபத்துடன் கார்த்தி வாயைத்திறந்து கத்துவது போன்று போஸ்டர் வெளியிடப்பட்டது.
இதையடுத்து கார்த்தியின் பருத்திவீரன், சிறுத்தை, தீரன் அதிகாரம் ஒன்று, கைதி ஆகிய படங்களின் போஸ்டரை ஒன்றினைந்து மீம்ஸாக வெளியிட்டு, கார்த்தி வாயைத்திறந்தால் அந்தப் படம் பிளாக்பஸ்டர்தான் என்று அவரது வெற்றிக்கு புதிய ஃபார்முலாவை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு ஹீரோக்களும் தங்களது படங்களின் வெற்றிக்காக அம்மா செண்டிமென்ட், பாம்பு செண்டிமென்ட் என பலவற்றை கடைபிடிக்க, தற்போது கார்த்தியின் வெற்றிக்கான காரணத்தைக் கண்டுபிடித்துள்ள நம்ம மீம் கிரியேட்டர்கள் கார்த்தியின் எதிர்கால இயக்குநர்களுக்கு சொல்லாமல் ஒரு வழிகாட்டுதலை மறைமுகமாக கொடுத்துள்ளனர்.