மதுரையில் இரண்டாவது கணவருடன் வசித்து வந்த கர்பிணிப்பெண் கொலை செய்யப்பட்ட நிலையில் முதல் கணவர் மற்றும் அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள செக்கானூரணி பகுதியில் அம்சத் என்ற கர்பிணிப் பெண் தனது இரண்டாவது கணவர் மதன் என்பவருடன் வசித்து வந்தார். இவர்கள் இருவரும் முறைப்படி திருமணம் செய்யாமலேயே வாழ்ந்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இருவரும் வசித்து வந்த வீட்டின் உள்ளே திடீரென மர்ம நபர்கள் புகுந்து கர்ப்பிணிப்பெண் அம்சத்தை சரமாரியாக வெட்டியுள்ளனர். அப்போது தடுக்க முயன்ற கணவர் மதனையும் வெட்டினர்.
இதில் சம்பவ இடத்திலேயே கர்ப்பிணிப் பெண் அம்சத் உயிரிழந்தார். படுகாயமடைந்த மதன் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு உடனே விரைந்து வந்த காவல்துறையினர் அம்சத் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலையை முதல் கணவர் வடிவேலு செய்து இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி, அவரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்நிலையில் தலைமறைவான வடிவேலு மற்றும் அவரது நண்பருமான ராஜேஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.