திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் பகுதியில் கோகுல்நாத் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய குடும்பம் கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக பேருந்து சேவையில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் கொரோனா பிரச்சனை மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு போன்றவைகளின் காரணமாக பேருந்து சேவையில் தொடர் நஷ்டத்தை சந்தித்து வந்துள்ளனர். இதன் காரணமாக பேருந்தை பராமரிக்க ஆகும் செலவை கட்டுப்படுத்துவதற்காகவும், பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரிவாயுவை வாங்குவதற்கு அதிக செலவு ஏற்படுவதாலும் தனியார் நிறுவனத்திலிருந்து தற்போது சிஎன்ஜி எரிவாயுவை வாங்கியுள்ளனர்.
அதாவது பேருந்தில் சிஎன்ஜி எரிவாயு நிரப்பும் கொள்கலன்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் சிஎன்ஜி இயற்கை எரிவாயுவை நிரப்பினால் போதும். இதனால் பேருந்துகள் வழக்கம் போல் இயங்குவதோடு, காற்று மாசுபாடும் ஏற்படாது. அதன் பிறகு பேருந்தில் 90 லிட்டர் அளவிலான சிஎன்ஜி கொள்கலன்கள் அமைக்கப்பட்டு கேஸ் நிரப்பப்பட்டுள்ளது. இது 600 கிலோ டீசலுக்கு சமமானது ஆகும். இது டீசல் விலையை விட 40 ரூபாய் குறைவாகவே இருப்பதால் செலவை வெகுவாக கட்டுப்படுத்த உதவும் என்று பேருந்தின் உரிமையாளர் கூறியுள்ளார். இந்த பேருந்து கூடிய விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது. மேலும் இதே முறையை அரசு பேருந்துகளிலும் பயன்படுத்தினால் காற்று மாசுபாடு பெருமளவு குறையும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.