ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக அதிகம்பேர் பாதிக்கப்பட்டு பலி எண்ணிக்கை 100க்கும் மேல் அதிகரித்துள்ளது.
உலகம் முழுவதும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் ஒரு பக்கமிருக்க பல்வேறு நாடுகளில் தற்போது கனமழை, வெள்ளம், நிலச்சரிவு, என இயற்கைப் பேரிடர்களும் ஏற்பட்டு மக்களை துன்புறுத்தி வருகிறது. இந்த நிலையை மாற்றுவதற்காக மீட்பு படையினர் பெரும்பாலும் போராடி வருகின்றனர். ஆனாலும் உயிர் பலிகள் அதிகரித்துக் கொண்டுதான் செல்கிறது. இந்த சூழலில் ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் உள்ள 12 மாகாணங்களில் புதன்கிழமை அன்று பெய்த திடீர் கனமழையால் பெரும் வெள்ள பெருக்கு ஏற்பட்டது.
இந்த வெள்ளப்பெருக்கால் பர்வான் மாகாணத்தில் மட்டும் அதிகபட்சமாக 85 பேர் பலியானதுடன் 110 பேர் காயமடைந்தனர். 1,500 வீடுகள் சேதமடைந்தது மட்டுமல்லாமல், 1,100 ஹெக்டேர் விவசாய நிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளது.வெள்ளநீர் வெளியே வடிந்தபோதிலும் பல இடங்களில் சாலைகளில் சகதியாக மக்கள் நடமாட முடியாத நிலையில் காணப்படுகிறது. இதனால் அதை அப்புறபடுத்தும் பணியில் மீட்பு படையினர் இறங்கி செயலாற்றி வருகின்றனர்.