கரூர் மாவட்டம் ஆத்தூர் கிராமத்தில் காந்திநகரைச் சேர்ந்தவர் தான் சந்தோஷ். இவர் தனது 7 நண்பர்களுடன் சேர்ந்து வேட்டை நாயின் உதவியுடன் அருகில் இருக்கும் வனப்பகுதிக்கு வன விலங்குகளை வேட்டையாடச் சென்றுள்ளார்.
அப்போது வேட்டையில் சிக்கிய முயல், காடை, அணில் உள்ளிட்ட வன உயிரினங்களைச் சமைத்து ருசித்து சாப்பிட்டுள்ளனர். சமைத்து சாப்பிட்டது மட்டுமில்லாமல் உயிரினங்களை கையில் வைத்தவாறு புகைப்படம் எடுத்த இளைஞர்கள், டிக்டாக் மற்றும் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட, அது வைரலானது..
இதை சமூக வலைத்தளங்களில் பார்த்த கரூர் மாவட்ட காவல் துறையினர், வனத் துறை அலுவலர்களுக்குத் தகவல் அளித்தனர். அதைத்தொடர்ந்து வனத் துறை அலுவலர் விஜயகுமார் தலைமையிலான வனத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்தநிலையில், வன உயிரினங்களை வேட்டையாடிய குற்றத்திற்காக சந்தோஷ் மற்றும் அவரது நண்பர்களான மார்ட்டின், தீனதயாளன், சித்தார்த், மணிகண்டன், வீரக்குமார், அஜித் உள்ளிட்ட 7 இளைஞர்களை இந்திய வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்தக் குற்றங்களுக்காக ரூ 25,000 அபராதமும் 3 ஆண்டு முதல் 7 ஆண்டு வரை சிறைத் தண்டனையும் விதிக்கப்படலாம் என வனத் துறையினர் தெரிவித்தனர்.