பிரான்ஸ் அரசு “கோவிஷீல்ட்” கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு தங்களது நாட்டுக்குள் பயண அனுமதி வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரத்தை பெற்ற இந்திய சீரம் நிறுவனத்தின் “கோவிஷீல்ட்” தடுப்பூசி பல நாடுகளிலும் தற்போது பயன்பாட்டில் உள்ளது. இந்நிலையில் அஸ்ட்ராசெனகா தடுப்பூசியானது ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்குள் அனுமதிக்கப்படுவோர் போட்டுக் கொள்ள வேண்டிய கொரோனா தடுப்பூசியின் பெயர் பட்டியலில் இடம் பெற்றிருந்தது. அதேசமயம் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி அந்த பட்டியலில் இடம் பெறவில்லை. எனவே ஐரோப்பிய நாடுகளுக்கு இந்தியாவில் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் பயணிப்பதில் சிக்கல் ஏற்பட்டிருந்தது. இதையடுத்து இந்த விவகாரம் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்திடம் இந்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்பிறகு பல்வேறு ஐரோப்பிய யூனியன் நாடுகளும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியை போட்டு கொண்டவர்களை தங்களது நாட்டுக்குள் அனுமதிக்க ஒப்புதல் அளித்துள்ளது. அந்த வகையில் “கோவிஷீல்டு’ தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு பிரான்ஸ் அரசும் தற்போது அனுமதி வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே “வெளிநாடுகளிலிருந்து பிரான்ஸ் வருவோர் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகளை போட்டு கொண்டாலும் அந்நாட்டுக்குள் அனுமதி வழங்கப்படும்” என்று பிரான்ஸ் நாட்டு பிரதமர் ஜீன் கேஸ்டக்ஸ் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.