பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் “பெகாசஸ்” விவகாரம் தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் நப்தலி பென்னட்டிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகின் 14 நாடுகளைச் சேர்ந்த முன்னாள் தலைவர்கள் மற்றும் தற்போதைய தலைவர்கள் உட்பட உலகம் முழுவதும் 50,000 பேருடைய செல்போன்கள் இஸ்ரேல் நிறுவனமான என்.எஸ்.ஓ தயாரித்த “பெகாசஸ் ஸ்பைவேர்” உளவு செயலியால் உளவு பார்க்கப்பட்டுள்ளதாக கடந்த வாரம் பரபரப்பு தகவல் வெளியானது.
இதன் காரணமாக கடும் அதிர்வலைகள் ஏற்பட்டிருந்த நிலையில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானை மொரோக்கோ நாட்டின் பாதுகாப்பு படைகள் பெகாசஸ் மூலம் உளவு பார்ப்பதாக செய்தி வெளியானது. ஆனால் அந்த செய்தியை மொரோக்கோ நாட்டு அரசு ஏற்க மறுத்துவிட்டது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வெளியான செய்திக்கு என்.எஸ்.ஓ நிறுவனமும் மறுப்பு தெரிவித்துவிட்டது.
இந்நிலையில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் இந்த விவகாரம் தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் நப்தலி பென்னட்டிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் இமானுவேல் மேக்ரான் பெகாசஸ் விவகாரத்தை தீவிரமாக எடுத்துக் கொள்ளும்படி வலியுறுத்தியதாகவும், அதற்கு பென்னட் விரைவில் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்று மேக்ரானிடம் உறுதி அளித்ததாகவும் கூறப்படுகிறது.