பிரதமர் நரேந்திர மோடி வருகிற 11-ம் தேதி தமிழகத்திற்கு வருகை புரிகிறார். பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு அவருக்கு வரவேற்பு அளிப்பது தொடர்பாக பாஜகவினர் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். அந்த வகையில் மதுரை மாவட்டத்திலுள்ள வாடிப்பட்டி அருகே சாணம்பட்டி பகுதிக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வருகை புரிந்திருந்தார். அண்ணாமலையின் வருகையை முன்னிட்டு பாஜக கட்சியினர் ஒரு பேனர் வைத்திருந்தார்கள்.
அந்த பேனர் தற்போது தமிழக அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தி கேலிக்குள்ளாகியுள்ளது. அதாவது அண்ணாமலையை வரவேற்பதற்காக வருங்கால முதலமைச்சரே என்று கூறி பேனர் வைத்திருக்கிறார்கள். ஆனால் அதில் வருங்கால முதலமைச்சரே என்பதற்கு பதிலாக வருங்கால முதலைமைச்சரே என்று வாசகம் இருந்தது. இந்த வாசகம் அடங்கிய பேனரை அண்ணாமலையின் பார்வையில் படாதவாறு கட்சியினர் உடனடியாக அப்புறப்படுத்தியுள்ளனர்.
ஆனாலும் இந்த வாசகம் அடங்கிய பேனர் தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாகி கேலிக்குள்ளாகியுள்ளது. மேலும் பாஜகவின் ஆட்சி தமிழகத்தில் அமையும் என்று அண்ணாமலை திட்டவட்டமாக கூறிவரும் நிலையில், அவரை வரவேற்பதற்காக சொந்த கட்சிக்காரர்கள் வைக்கப்பட்ட பேனரால் தற்போது அவர் நொந்து போய் இருப்பதாக கட்சியினர் வேதனை தெரிவித்துள்ளனர்.