தூத்துக்குடியில் இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்ததை கை தட்டி கேட்ட இளைஞர்கள் 2 பேரை ஒரு கும்பல் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி சிவந்தாக்குளம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் . 38 வயதான இவர் மரைன் என்ஜினீயராக பணியாற்றி வருகின்றார். அதே போல ஷிப்பிங் கம்பெனியில் வேலை பார்க்கும் விவேக் பிரையண்ட் நகர் 9_ஆவது தெருவில் வசித்து வருகின்றார். நண்பர்களான இவர்கள் இருவரும் இன்று மாலை தூத்துக்குடி காமராஜ் கல்லூரி அருகேயுள்ள சிவந்தாக்குளம் பகுதியில் நின்று கொண்டு இருந்தபோது அங்கே இரண்டு சக்கர வாகனத்தில் வந்த ஏழு பேர் கொண்ட கும்பல் அரிவாளால் இருவரையும் சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச் சென்றது.
இதையடுத்து ரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரையும் அந்தப்பகுதியில் இருந்தவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துமனைக்கு கொண்டு சென்றனர். இருவரும் பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இதையடுத்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினரின் முதல்கட்ட விசாரணையில் கொலை செய்த கும்பல் சிவந்தாக்குளம் பகுதியில் வேகமாக இருசக்கர வாகனத்தில் சென்றபோது முருகேசன் , விவேக் கண்டித்ததாக கூறப்படுகிறது. சாலையில் மெதுவாக போங்க , வேகமா போகாதீங்க என்று சொன்னதற்காக மாலை நேரத்தில் இருவரை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.