ஜெர்மன் பொருளாதார அமைச்சகம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நாட்டில் பணவீக்க விகிதம் குறிப்பிடத்தக்க அளவில் குறையும் என்று தகவல் வெளியிட்டுள்ளது.
ஜெர்மன் நாட்டில் கடந்த ஆண்டு மதிப்பு-கூட்டப்பட்ட வரி (Value-added tax ) கொரோனா நிவாரண நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக குறைக்கப்பட்டது. இதன் காரணமாக தற்போது பணவீக்க விகிதம் 4.5 சதவீதமாக மாறியுள்ளது. மேலும் 1993-ஆம் காலகட்டத்திற்கு பிறகு இதுவே ஜெர்மனியில் ஏற்பட்ட அதிகமான பணவீக்க விகிதம் என்று கூறப்படுகிறது. இதன் விளைவாக எரிபொருள்களின் விலை உயர்வு மற்றும் மூலப் பொருட்களின் விலையில் கூர்மையான உயர்வு உள்ளிட்டவை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜெர்மனியின் மோசமான இந்த நிலைமையை எதிர்கொள்ள விரைவில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று Deutsche Bank CEO கிறிஸ்டியன் தைவிங் கூறியுள்ளார். இதற்கிடையே பொருளாதார அமைச்சகம் விநியோகம் தொடர்பான ஆர்டர்கள் தற்போது நிலுவையில் இருக்கும் நிலையில் வருகின்ற ஆண்டுகளில் தொழில்துறை நடவடிக்கைகள் குறைவாகவே இருக்கும் என்று கூறியுள்ளது.
மேலும் தொழில் துறையில் உள்ள பலவீனங்களை ஈடுசெய்ய வேண்டும் என்றால் கொரோனா வைரஸ் நடவடிக்கைகளை எளிதாக்க வேண்டும் என்று அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. அதேசமயம் இந்த ஆண்டிற்கான ஜெர்மனி அரசாங்கத்தின் பொருளாதார வளர்ச்சி கணிப்பு 3.5 சதவீதத்தில் இருந்து 2.6 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த வளர்ச்சி கணிப்பு விகிதம் வரும் ஆண்டு 4.1சதவீதமாக உயரும் என்று கூறப்படுகிறது. அதேபோல் ஏப்ரல் மாதத்தில் 3.6 சதவீதமாக வளர்ச்சி கணிப்பு விகிதம் அதிகரிக்கும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.