ஒடிசா மாநிலம் பிபி.நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வசித்துவரும் சிறுமி ஒருவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஒருவனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.. இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்து ஓராண்டுக்கு மேலாகியும், போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் சிறுமி மிகவும் மனதளவில் பாதிப்புக்குள்ளாகி இருந்ததாக சொல்லப்படுகிறது.
இந்தநிலையில், நேற்று வீட்டில் உள்ள அனைவரும் வெளியில் சென்ற நேரத்தில் சிறுமி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.. இந்த சம்பவம் குறித்து பேசிய போலீஸ் சூப்பிரண்டு, ‘சிறுமி அவரது சமூகத்தைச் சேர்ந்த ஒருவனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.. அந்த நபர் சிறுமி வசித்துவரும் அதே கிராமத்தில் தான் வசித்து வருகிறார். ஆனால் சிறுமியின் குடும்பத்தினர் இந்த வழக்கில் சமரசம் செய்யவே விரும்புகின்றனர்.
நாங்கள் குற்றவாளியின் மேல் முதல் தகவலறிக்கையை பதிவு செய்துள்ளோம். ஆனால், அவர் ஐகோர்ட்டில் ஜாமீன் வாங்கியுள்ளதால், மேற்படி எந்த ஒரு நடவடிக்கையும் தங்களால் எடுக்க முடியவில்லை. மேலும் குற்றவாளி மீது குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்துள்ளோம்” என்றார்.