இந்தியா உட்பட உலகம் முழுவதும் 200 நாடுகளுக்கும் மேல் கொரோனா வைரஸ் பரவி மிகவும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் இதுவரை 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தை பொருத்தவரை கொரோனா வைரசுக்கு இதுவரை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
74 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அவர்களை அனுமதிக்க போதிய இடவசதி ஏற்படுத்துவதற்கு அரசு தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தங்களால் முடிந்த உதவி செய்யவும் தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்த நிலையில் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கை கொரோனா தனிமை முகாமாக அரசு பயன்படுத்திக் கொள்ளலாம் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் எழுதிய கடிதத்தை மாநகராட்சி காவல் ஆணையர் பிரகாஷிடம் அளித்துள்ளனர். ஆணையரிடம் எம்எல்ஏக்கள் மா. சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் கடிதத்தை வழங்கினர். முன்னதாக, கொரோனாவை தடுக்க முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.