கொரோனா வைரஸ் தாக்காமல் இருக்க ஈரான் நாட்டின் சிறைகளில் இருக்கும் 70 ஆயிரம் கைதிகளை விடுவிப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகின்றது. இந்தியா, அமெரிக்கா உட்பட 109 நாடுகளில் கொரோனா தீயாக பரவியுள்ளது. இதுவரையில் கொரோனா வைரசால் மொத்தமாக 3, 831 பேர் இறந்துள்ளனர். மேலும் 110,092 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான் மற்றும் தென் கொரியாவில் வேகமாக கொரோனா பரவி வருகிறது. உலக நாடுகள் அனைத்துமே கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
ஈரானில் கொரோனா வைரஸ் காரணமாக இதுவரையில் 237 பேர் உயிரிழந்துள்ளார். மேலும் 7,161 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது ஈரானில் கொரோனா வேகமாக பரவி வருவதால், சிறையில் இருக்கும் கைதிகளுக்கும் பரவக்கூடாது என்பதற்காக 70 ஆயிரம் கைதிகளை விடுவிப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
ஈரானின் நீதித்துறை தலைவர் இப்ராஹிம் ரெய்சி (Ebrahim Raisi) இந்த அறிவிப்பை வெளியிட்டார், அதில், “கொரோனா வைரஸ் வைரஸ் தாக்கம் நாட்டில் மிகவும் அதிகமாக இருப்பதால், சிறைகளில் உள்ள கைதிகள் பாதிக்கப்படாமல் இருக்க அவர்களை தற்காலிகமாக விடுவிப்பதாக தெரிவித்தார். மேலும் கைதிகளை விடுதலை செய்வதால் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அரசு தொடர்ந்து கவனிக்கும் என்றார்.