நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் கொரோனா வைரஸ் இருக்கிறதா என்று சோதனை மேற்கொள்ளப்படும் என ஈரான்அரசு தெரிவித்துள்ளது.
சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரஸ். இந்த வைரஸ் 137 நாடுகளில் பரவி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை காவு வாங்கி இருக்கிறது. மேலும் 1 லட்சத்து 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவின் பிடியில் சிக்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். சர்வதேச நாடுகள் அனைத்தும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை செய்து வருகின்றன.
அந்த வகையில் ஈரானும் ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது. அதாவது, நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் கொரோனா வைரஸ் இருக்கிறதா என்று சோதனை மேற்கொள்ளப்படும் என ஈரான்அரசு தெரிவித்துள்ளது. 8 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட அந்நாட்டில் கடந்த மாதம் முதல் உயிரிழப்புகள் ஏற்படத் தொடங்கியதை அடுத்து, இதுவரை மொத்தம் 500 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் 1,289 பேர் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில், 11,364 பேர் அறிகுறிகளுடன் உள்ளனர்.
இராணுவத் தலைவர் மேஜர் ஜெனரல் முகமது பகேரி (Mohammad Bagheri) தலைமையில் நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அப்போது ஜெனரல் முகமது பகேரி கூறுகையில், ‘அடுத்த 24 மணி நேரத்திற்குள் கடைகள் மற்றும் வீதிகளில் ஆள் நடமாட்டம் இல்லாமல் செய்து முழு இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர பாதுகாப்புப் படையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
மேலும் அடுத்த 10 நாள்களில் ஒட்டுமொத்த ஈரானும் இன்டர்நெட், கைப்பேசி ஆகியவற்றில் கண்காணிக்கப்படும் என்றும், தேவைப்பட்டால் வீடுவீடாகச் சென்று யாருக்கேனும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறதா என்று சோதனை செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.