உணவகங்கள், மளிகைக் கடைகள் ஆகியவை நேர வரம்பு ஏதுமின்றி நாள் முழுவதும் இயங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலகத்தில் காணொலி மூலம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இதில் பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ளார். அதில், காலை 7-9 காலை உணவு விற்கலாம். மதியம் 12 – 2.30 மணி வரை மதிய உணவு விற்கலாம். மாலை 6-9 மணி வரை இரவு உணவு விற்கலாம். காலை 9-12 மணி வரை மளிகை கடைகள் இயங்கலாம்.. என்று முதலில் தகவல் வெளியானது.
இந்நிலையில் உணவகங்கள், மளிகைக் கடைகள் ஆகியவை நேர வரம்பு ஏதுமின்றி நாள் முழுவதும் இயங்க அனுமதிக்கப்படுகிறது. இதற்கான நேர வரம்பு எதும் குறைக்கப்படவில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மக்களுக்கு தங்கு தடையின்றி பொருட்கள் கிடைக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் தமிழக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மேலும் அனைத்து வகையான கடைகளிலும் மக்கள் 3 அடி இடைவெளிவிட்டு நின்றே பொருள்களை வாங்க வேண்டும். ஊபர், ஸ்விக்கி போன்ற ஆன்லைன் உணவு விநியோக நிறுவனங்களுக்கு தடை தொடர்கிறது. மளிகை கடைகள் வீடுகளுக்கே சென்று, பொருட்களை விநியோகிக்கலாம். மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க உறுதி செய்ய ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட 9 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து வகையான கடைகளிலும் மக்கள் 3 அடி இடைவெளிவிட்டு நின்றே பொருள்களை வாங்க வேண்டும்
மேலும் தமிழகத்தில் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்படுகிறது என்றும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு மார்ச் 31 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்திருந்த நிலையில், நேற்று முன்தினம் பிரதமர் மோடி 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு என்ற அறிவிப்பை வெளியிட்டார். இதன் காரணமாக தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.