இந்த உலகத்தில் அதிகம் தேவைப்படுவது தற்பொழுது மனிதநேயம் மட்டுமே அந்த மனிதநேயத்தின் மகத்துவம்மாகத் திகழ்ந்த அன்னை தெரசாவின் வாழ்க்கை வரலாரே இந்த செய்தி தொகுப்பு:
ஏற்கனவே இரண்டு உலகப் போர்களை கடந்து பல்வேறு உயிரிழப்புகள் ஏற்பட்ட நிலையில், மூன்றாவது உலகப்போர் எப்பொழுது நேரிடும் என்ற அச்சம் அனைவரின் மனதிலும் இருந்துவரும் நிலையில், நமக்கு தற்பொழுது தேவைப்படுவது பணமோ, விஞ்ஞான வளர்ச்சியோ, தொழிநுட்பமோ, இராணுவ பலமோ அல்ல அன்பும், நேசமும், பாசமும், கருணையும் தான் அத்தனைக்கும் ஒட்டு மொத்த இலக்கணமாய் வாழ்ந்தவர் இன்றும் கோடிக்கணக்கான உள்ளங்களில் வாழ்ந்துகொண்டிருப்பவர் அன்னை தெரசாவின் வாழ்க்கை வரலாற்றை சற்று விரிவாக பார்ப்போம்.
1910ஆம் ஆண்டு ஆகஸ்டு 27-ஆம் தேதி அல்பேனியாவில் பிறந்த தெரசாவின் இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஸா பொஜனாக்கா. ஏழைகளுக்காக சேவை செய்வதை இலக்காககொண்டு 24 வயதில் உரிழந்ததெரசா என்பவரை முன் உதாரணமாக கொண்டு தனது பெயரை தெரேசா என்று மாற்றிகொண்டார். பிற்காலத்தில் அன்பின் முகவரியாக அந்த குழந்தை வளரும் என்பது அவரது பெற்றோர்களுக்கு தெரியாது.
ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தில் கன்னியாஸ்திரியாக ஆன பிறகு அவர் சகோதரியாக மாறினார். 1929 ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி தனது பத்தொன்பதாவது வயதில் கல்கத்தாவில் காலடி வைத்தார் அன்னை தெரசா அடுத்து 68 ஆண்டுகளில் அன்னையின் கருணையின் மழையில் நனையும் பாக்கியத்தைப் இந்திய மண் பெற்றது. சுமார் 17 ஆண்டுகள் ளொரிடா கன்னிமார்கள் குழுவில் சேர்ந்து ஆசிரியராக பணியாற்றியபோது கல்கத்தாவின் நெருக்கமான தெருக்களில் மிக மோசமான நிலையில் வாழ்ந்து வரும் ஏழைகளுக்கு ஆதரவற்றவர்களுக்கு நோய்வாய்ப்பட்டவர்களுக்கு உதவியாக பணிபுரிந்து வந்தார்.
பின் ஓய்வுக்காக இந்தியாவின் ஜாஸ்மின் நகருக்கு இரயில் பயணம் மேற்கொண்டிருந்த போது தான் அவரது வாழ்க்கையும் பல்லாயிரக்கணக்கான ஆதரவற்றோரின் வாழ்க்கையையும் மாற்றி அமைக்க போகும் ஒரு தெய்வீக அழைப்பை அவர் உணர்ந்தார். நோயாளிக்கும் உதவ கடவுளிடமிருந்து வந்த அருளாக அதனை ஏற்றுக் கொண்டார். அவரது சேவைகள் ளொரிடா குழுவின் விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு இருந்ததால் குழுவில் இருந்து விலகினார். கல்கத்தாவில் வறுமை தெருக்களில் ஒன்றாகத் திகழும் சேரி ஒன்றில் நுழைந்தார்.
முதன்முதலாக அந்த சேரிக்குள் நுழையும் போது அவர் கைகளில் வெறும் 5 ரூபாய் பணம் 3 சேலைகளுடன் நிறைய அன்பு மட்டும் தான் இருந்தது. கடுமையான நிலையில் இருந்த ஆதரவற்றோர்கள் மத்தியில் தனது பணியைத் தொடங்கினார் அன்னை தெரசா. 1950ல் மிஷனரீஸ் ஆஃ சரிட்டி என்ற அமைப்பை உருவாக்கினார். 1952இல் நிர்மல் என்ற இல்லத்தை திறந்தார். அந்த இல்லம்தான் பல்லாயிரக்கணக்கான ஆதரவற்றோர்களுக்கு கருணை கடலாக அவர்களின் கடைசி காலத்தில் கருணை இல்லமாக இருந்தது.
கல்கத்தாவின் தெருக்களில் இருந்து உயிர் ஊசலாடிய நிலையில் காப்பாற்றப்பட்ட சுமார் 45 ஆயிரம் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் அந்த இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டனர். சக மனிதர்களாக அதீத அன்பை தந்த அன்னையின் இல்லத்தில் சுமார் 19,000 பேர் ஆதரவின்றி நலிந்து போய் இருந்தனர். அந்த இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டவர்கள் தங்கள் இறுதி நிமிடங்களில் அன்னையின் அரவணைப்பில் அன்பை உணர்ந்து மகிழ்ச்சியுடன் மரணத்தை தழுவினர்.
ஒருமுறை ஏழைகளுக்கு உதவ அன்னை தெரசா ஒரு செல்வந்தரிடம் கையேந்தி நின்றபோது அந்த செல்வந்தர் அன்னையின் கையில் காரி உமிழ்ந்தார். அப்பொழுது அன்னை என்ன சொன்னார் தெரியுமா? கைக்குள் விழுந்த எச்சிலை கைக்குள்ளேயே மூடிக் கொண்டு இந்த எச்சில் எனக்கு போதும் என் ஏழைகளுக்கு ஏதாவது கொடுங்கள் என்றார். திக்குமுக்காடிப் போன அந்த செல்வந்தர் அன்னையின் கால்களில் கதறி அழுது வாரி வழங்கினார்.
1953ல் ஓர் அநாதை இல்லத்தையும் 1957ல் தொழு நோயாளிகளுக்கான இல்லத்தையும் தொடங்கி தமது பணியை அகலப்படுத்தினார் அன்னை தெரசா. தொழுநோயாளிகளுக்கு வடியும் சீலை அவரது கைகளாலேயே துடைத்து விடுவார். பலர் அருவருத்து ஒதுங்கும் போது அன்னையும் அவரது சகோதரிகளும் தொழுநோயாளிகளின் காயத்திற்கு மருந்து போட்டுவிட்டன. ஆரம்பத்தில் 10 சகோதரிகளுடன் தொடங்கிய அவரது அமைப்பு 500க்கும் மேற்பட்ட கிளைகளாக விரிவடைந்து 132 நாடுகளில் இயங்கி வருகிறது. தனது பணிக்கு விளம்பரம் தேடாத அன்னை தெரசாவை நோக்கி விருதுகளும் பட்டங்களும் படையெடுத்தன.
1979இல் அமைதிக்கான நோபல் பரிசு 1980-ல் இந்தியாவின் பாரத ரத்னா விருது 1985 இல் அமெரிக்கா சுதந்திர பதக்கம் ஆகியவற்றை பெற்றார். உன்னத அன்னையின் உயிர் மூச்சு 1997ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி 87 ஆவது வயதில் நின்றது. எதற்கும் கலங்காத கண்களில் இருந்தும் கண்ணீர் கசிந்தன.
அவர் வாழ்ந்த போதும் அவர் மறைந்த பொழுதும் அவரிடம் இருந்தது மூன்று சேலைகளும் ஒரு சிலுவையும் ஜெபமாலை மட்டுமே ஆனால் அன்பை மட்டும் அமுத சுரபியாக அள்ளி அள்ளி வழங்கி விட்டு சென்று இருக்க்கிறார். அன்னை தெரசாவின் நினைவு நாளான இன்று நாம் உடலை உருக்கி ஏழைகளுக்காக அன்பு செலுத்த வேண்டியதில்லை நமக்கு வேண்டியவர்களிடம் உண்மையான அன்பு செலுத்தினாலே போதும் அந்த வானம் வசப்படும் என்பதை நினைவில் கொண்டு அனைவரிடமும் அன்பு செலுத்துவோம்.