திருமணம் நடக்க வேண்டிய நாள் நெருங்கிய நிலையில் மணமகன் மணப்பெண்ணை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
திருமணத்திற்கு சில நாட்களே இருந்த நிலையில் தான் திருமணம் செய்துகொள்ள இருந்த பெண்ணை கொடூரமாக கொலை செய்துவிட்டு தலைமறைவான மணமகனை ரஷ்ய காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். முகம் சிதைக்கப்பட்டு நிர்வாண கோலத்தில் சடலமாக மீட்கப்பட்டார் மெரினா பங்களாவா. சந்தேகத்தின் அடிப்படையில் குற்றவாளியாக தேடப்படும் புது மாப்பிள்ளையான அலெக்சாண்டரை ஆகஸ்ட் மாதத்தில் மெரினா திருமணம் செய்ய இருந்தார். இதற்காக அவர் தனக்கான திருமண ஆடைகளையும் வாங்கியிருந்தார்.
இந்நிலையிலேயே இத்தகைய கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரிக்கையில் ஞாயிற்றுக்கிழமை அலெக்சாண்டர் ஒரு பையுடன் தனது குடியிருப்பை விட்டு வெளியேறியதை சிலர் பார்த்துள்ளனர். கோடாரியால் தாக்கப்பட்டு மெரினாவின் முகம் சிதைக்கப்பட்டு மண்டைஓடு நொறுங்கியது விசாரணையில் தெரிய வந்துள்ளது. உடல் முழுவதும் காயங்களுடன் சடலமாக உயிரற்றுக் கிடந்த மெரினாவை அலெக்ஸாண்டரின் தாய் தான் முதலில் பார்த்துள்ளார்.
அதோடு அந்த அறையில் துப்பாக்கி ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பல வருடங்களாக இவர்கள் காதலித்து வந்த நிலையில் ஒரே பகுதியில்தான் பணிபுரிந்து வந்துள்ளனர். மேலும் மெரினா அலெக்சாண்டர் தனக்கு துன்புறுத்தல் ஏற்படுவதாக காவல்நிலையத்தில் புகார் அளித்து பின்னர் அதனைத் திரும்பப் பெற்றுக் கொண்டது விசாரணையில் தெரியவந்ததை தொடர்ந்தே அலெக்ஸாண்டர் மீது காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஏற்கனவே திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான அலெக்சாண்டர் இந்த கொலையை செய்திருக்க வாய்ப்பு இருப்பதாகவே காவல்துறையினர் நம்புகின்றனர்.