Categories
திருவாரூர் நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

விசாரிக்க சென்ற இடத்தில்… “15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை”… காவலர் மீது பாய்ந்தது போக்ஸோ..!!

புகாரை விசாரிக்கச் சென்ற இடத்தில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாகை மாவட்டம், புத்தகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவருக்குத் திருமணமாகி 15 வயதில் ஒரு மகள் உள்ளார். செந்தில்குமார் குடும்பத் தகராறு காரணமாக, திருவாரூர் மாவட்டம் நன்னிலம் காவல்நிலையத்தில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு புகார் அளித்துள்ளார். இந்நிலையில், அந்தப் புகார் சம்பந்தமாக விசாரிப்பதற்கு கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு நன்னிலம் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரியும் அய்யாசாமி என்பவர் செந்தில்குமாரின் வீட்டிற்கு விசாரணைக்காகச் சென்றுள்ளார்.

அப்போது, வீட்டில் யாரும் இல்லாத நிலையில், சிறுமி மட்டும் தனியாக இருந்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி காவலர் அய்யாசாமி சிறுமியிடம் விசாரணை செய்வது போல், பேசி சிறுமிக்கு பாலியல் வன்புணர்வு செய்ததாகக் கூறப்படுகிறது. அதில், பலத்த காயமடைந்த சிறுமியை மீட்டு பெற்றோர் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் நன்னிலம் காவல் நிலையத்தில் புகார் அளித்த போது, காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காத காரணத்தால், திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரையிடம் சிறுமியின் பெற்றோர்கள் புகார் அளித்தனர். அதனடிப்படையில், அந்தப் புகார் மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நாகப்பட்டினம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, மகளிர் காவல் துறையினர் காவலர் அய்யாசாமியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இதனிடையே, சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்தது, காவலர் என்பதால் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கத் தயங்குவதாகவும், காவலர் அய்யாசாமி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சிறுமியின் உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் விசாரணைக்குச் சென்ற இடத்தில் 15 வயது சிறுமிக்கு காவலரே பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் நாகையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |