அமித்ஷாவின் கருத்துக்கு இந்தி தினத்தில் இந்திக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் ஹேஸ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
இந்தியாவில் இந்தி தினம் கொண்டாடப்படுகிறது . இந்தி தினத்தையொட்டி ஒரே நாடு ஒரே மொழி என்ற அடிப்படையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா ட்விட்டரில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், இந்தியா வெவ்வேறு மொழிகளைக் கொண்ட நாடு. ஒவ்வொரு மொழிக்கும் அதன் சொந்த முக்கியத்துவம் உண்டு. ஆனால் முழு நாட்டிற்கும் ஒரு மொழி இருப்பது மிகவும் முக்கியம்.
மேலும் இது உலகில் இந்தியாவின் அடையாளமாக மாற வேண்டும். இன்றைய தேதிக்கு இந்தியாவை ஒருங்கிணைக்க வேண்டுமென்றால், அது அதிகம் பேசப்படும் இந்தி மொழியால் மட்டுமே முடியும் என்று பதிவிட்டுள்ளார்.ஏற்கனவே மத்திய அரசு இந்தியை மற்ற இந்தி அல்லாத மாநிலங்களில் திணிக்க முயற்சி செய்து வருகின்றது என குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில் அமித்ஷா ட்விட் செய்திருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இதற்கு முக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார். தற்போது பலரும் சமூக வலைத்தங்களில் தங்கள் கருத்தை #StopHindiImposition, #StopHindiImperialism என்ற ஹேஸ்டேக் மூலம் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இது தற்போது இந்தியளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இந்தி தினத்தன்று சமூக வலைத்தளங்களில் இந்திக்கு எதிர்ப்பு கிளம்பியது பாஜகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.