பெங்களூரிலிருந்து கணவனை கத்தாருக்கு வழியனுப்பி வைக்க வந்த மனைவி விபத்தில் பலியானதால் அந்த குடும்பமே சோகத்தில் மூழ்கியுள்ளது.
கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் ஸ்னிஜோ ஜோஸ். இவர் பெங்களூரில் பணியாற்றி வரும் தமது மனைவி அனுவின் வருகையை எதிர்பார்த்து சம்பவதினத்தன்று பேருந்து நிலையத்தில் காத்து கொண்டிருந்தார். நீண்ட நேரமாகியும் தனது மனைவி அனுவிடம் இருந்து எந்தவொரு தகவலுமே வரவில்லை என்பதால், அவரது மொபைலுக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் மனைவி அனு பேசாமல், அவரது மொபைலை எடுத்துப் பேசியவர் சொன்ன தகவலை கேட்டு ஸ்னிஜோ அதிர்ச்சியடைந்தார்.
ஆம், அவினாசியில் தனியார் பேருந்துடன் கண்டெய்னர் லாரி ஒன்று மோதிய விபத்தில், அதில் பயணம் செய்த அனு உள்ளிட்ட 19 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.அனு மற்றும் ஸ்னிஜோ இருவரும் புது ஜோடி.. திருமணம் முடிந்து ஒரு மாதமே இந்த ஜோடிக்கு ஆகிறது. சமீபத்தில் தான் இருவரும் டெல்லி மற்றும் இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று ஜாலியாக தேனிவு கொண்டாடிவிட்டு திரும்பியுள்ளனர். அனு பெங்களூருவில் பணிபுரிந்து வருவதால், திருச்சூரில் இருக்கும் கணவரை பார்ப்பதற்கு சம்பவதினத்தன்று அந்த பேருந்தில் திரும்பியுள்ளார். இதனிடையே பேருந்து விபத்து தொடர்பாக தகவலறிந்து உடனடியாக அவினாசிக்கு ஸ்னிஜோ விரைந்து சென்றுள்ளார்.
அவினாசியில் இருக்கும் மருத்துவமனைகளை தேடி அலைந்த ஸ்னிஜோ கடைசியில் அனுவின் சடலத்தை மருத்துவமனை ஒன்றில் கண்டுபிடித்துள்ளார். மனைவியின் சடலத்தை பார்த்த கணவர் ஸ்னிஜோ கதறி அழுதுள்ளார். இதனை பார்த்து அங்கிருந்தவர்கள் கண்கலங்கி விட்டனர். கத்தாரில் வேலைபார்த்துவரும் கணவர் ஸ்னிஜோவை வழியனுப்பி வைப்பதற்காக மனைவி அனு, பெங்களூருவில் இருந்து திருச்சூருக்கு திரும்பியுள்ளார். ஆனால் கணவரை இறுதியாக ஒருமுறை பார்க்காமலையே அனு உலகை விட்டு விடைப்பெற்று சென்றுள்ளது குடும்பத்தினரை சோகத்தில் மூழ்கடித்துள்ளது.