கூலி தொழிலாளி வீட்டை கடப்பாரையால் உடைத்து மர்ம நபர்கள் பணம் மற்றும் பொருட்களை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஜவஹர் நகர் பகுதியில் கணேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கணேஷ் தனது வீட்டை பூட்டி விட்டு அருகில் இருக்கும் சகோதரர் வீட்டில் தங்கி இருந்திருக்கிறார். அதன்பின் தனது வீட்டிற்கு வந்து பார்த்த போது பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
பின்னர் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 200 ரூபாய் பணம், 25 புடவைகள், வங்கி கணக்கு புத்தகம், ஏ.டி.எம் கார்டு மற்றும் ஹோம் தியேட்டர் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து வீட்டின் பூட்டு மற்றும் பீரோவை கடப்பாரையால் மர்ம நபர்கள் உடைத்துள்ளனர்.
இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்கள் விட்டு சென்ற கடப்பாரையை கைப்பற்றி தப்பி ஓடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.