காஞ்சிபுரம் அருகே மனைவியை கத்தியால் குத்தி கொன்று விட்டு கணவனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் எண்ணைக்கார பகுதியில் வசித்து வருபவர் தேவிபிரசாத். இவர் அதே பகுதியில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சரஸ்வதி என்பவர் வீட்டின் அருகே உள்ள சில வீடுகளில் வீட்டு வேலை பார்த்து வந்துள்ளார். தேவி பிரசாத்துக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு. நாள்தோறும் மது அருந்திவிட்டு மனைவியை இழுத்துப்போட்டு அடிப்பதை வேலையாக வைத்திருந்தார்.
அதேபோல் வீட்டு வேலைக்கு சென்று வரும் மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அதேபோல் நேற்று முன்தினம் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட சண்டை முற்றி ஆத்திரமடைந்த தேவிபிரசாத் சரஸ்வதியை சமையலறையில் இருந்த கத்தியால் குத்தியுள்ளார். மேலும் ஆத்திரம் அடங்காமல் அவரது கழுத்தை நெரித்தும் கொலை செய்துள்ளார்.
பின் செய்த தவறை உணர்ந்த தேவிபிரசாத் சமையல் அறையில் மின்விசிறி மாற்றப்படாமல் இருந்த கொக்கியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் கொலை மற்றும் தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.