கோவை தனியார் மருத்துவ கல்லூரியில் இரண்டு மாணவர்கள் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை சேர்ந்த மருத்துவரின் மகன் உதித் சூர்யா நீட் தேர்வை மகாராஷ்டிரா-வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வெழுதி தேனி மருத்துவ கல்லூரியில் சேர்ந்தது நாடுமுழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த புகாரை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் இந்த ஆண்டு சேர்ந்த மாணவர்களின் ஆவணங்கள் மீண்டும் சரி பார்க்கப்பட்டது.
அந்த வகையில் கோவையில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் நடைபெற்ற ஆவண சரி பார்ப்பில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து 2 மாணவர்கள் சேர்ந்துள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது.இது தொடர்பாக சென்னையில் உள்ள மருத்துவ கல்வி இயக்குனரகத்துக்கு, சம்பந்தப்பட்ட தனியார் கல்லூரி புகார் கடிதம் அளித்துள்ளது. அதில் சம்மந்தப்பட்ட மாணவனின் நீட் நுழைவுத்தேர்வு புகைப்படத்திற்கும், அனுமதி கடித புகைப்படத்திற்கும் வித்தியாசம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.