நிலப் பிரச்சனை காரணமாக விவசாயி ஒருவரை சரமாரியாக வெட்டிக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பனங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம்(47). இவருக்கு மனைவி, இரண்டு மகள், ஒரு மகன் ஆகியோர் உள்ளனர். இவர் சொந்தமாக 20 ஏக்கர் விவசாய நிலம் வைத்துள்ளார். அதில் ஐந்து ஏக்கர் நிலத்தை கோவிந்தன் என்பவருக்கு ஒப்பந்தம் அடிப்படையில் வழங்கியிருக்கிறார். இந்நிலையில் அந்த ஐந்து ஏக்கர் விவசாய நிலத்தை கோவிந்தன் தனது பெயரில் மாற்றம் செய்து முறைகேடு செய்துள்ளார். இதனால் சண்முகம், கோவிந்தன் இருவருக்குமிடையே பிரச்னை இருந்து வந்துள்ளது.
இதையடுத்து கோவிந்தன் முறைகேடு செய்த நிலத்தை பெங்களூருவைச் சேர்ந்த சண்முகம் என்பவருக்கு விற்றுள்ளார். ஏற்கனவே சண்முகம், கோவிந்தன் இடையே பிரச்சனை இருந்துவந்த நிலையில் நிலத்தின் உரிமையாளரான சண்முகத்தை, கோவிந்தன் கொலை செய்ய முடிவு செய்து, வீட்டில் யாரும் இல்லாததை அறிந்துகொண்டு கோவிந்தன் சண்முகத்தை கொடூரமாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இதில், படுகாயமடைந்த சண்முகம் துடிதுடிக்க சம்பவயிடத்திலேயே உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து பாலக்கோடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கோவிந்தனை தீவிரமாக தேடி வருகின்றனர்.