ஐதராபாத்தில் கவனக்குறைவினால் அப்பாவே தனது குழந்தையை கொன்ற சம்பவம் பெரும்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் சந்திரயங்குட்டாவின் பார்காஸ் பகுதியைச் சேர்ந்தவர் கலீத் சாரி. 28 வயதான இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வீட்டின் அருகே நிறுத்தப்பட்டு இருக்கும் தனது காரை எடுத்துள்ளார். அதேநேரம் அவரது 18 மாத பெண் குழந்தை ஹுடா, காருடைய முன் சக்கரத்திற்கு அருகில் விளையாடி கொண்டு இருந்துள்ளது. அதனை பார்க்காத கலீத், காரை தனது குழந்தை மீது தெரியாமல் ஏற்றி இறக்கியுள்ளார். பின்னர் குழந்தை மீது காரை ஏற்றியதை அறிந்த உடனே கலீத் பதறிப்போய் குழந்தையை சிகிச்சைக்காக அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு போயுள்ளார்.
ஆனால் அங்கு மருத்துவர்கள் சிகிச்சை பலனின்றி குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து தவலறிந்த சந்திரயங்குட்டா போலீசார் கவனக்குறைவால் உயிரிழப்பை ஏற்படுத்தியதாக கலீத் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். எனது கவனக்குறைவால் என்னுடைய குழந்தையை நானே கொன்று விட்டேன் என்று குற்ற உணர்ச்சியில் கலீத் சாரி மிகுந்த மனவேதனையில் துடித்து வருவதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இது போன்ற கவனக்குறைவால் சோக சம்பவங்கள் பல நடந்து கொண்டுதான் இருக்கிறது. காரை இயக்கும் முன் காரை சுற்றிலும் யாராவது இருக்கிறார்களா என்பதை கவனித்து பின்னரே இயக்க வேண்டும். குறிப்பாக வீட்டில் சிறு குழந்தைகள் இருந்தால் கண்டிப்பாக வாகனத்தை சுற்றியும் பார்த்துவிட்டு இயக்குவது நல்லது. இப்படி விழிப்புடன் இருந்தால் இது போன்ற விபத்துகளை தவிர்க்கலாம்.